ஆரம்ப காலம் – பாகம் 1
அனைவருக்கும் வணக்கம்..!!
நான் செந்தில், என்னுடைய வாழ்க்கை பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி இப்பகுதியை உருவாக்கியுள்ளேன். இங்கு எழுதப்படும் கதைகள் ஒவ்வொரு பகுதியாக வெளியிடப்படும்.
நீங்கள் இதை வாசிக்க முற்படும்போது பாகம் – 1 இல் படித்தால் ஒரு கதை கோர்வையை உங்களால் உணர முடியும். என் பெயர் செந்தில் என உங்களிடம் கூறிவிட்டேன். ஆனால், என்னுடைய சரியான வயது என்ன என்பது என் பெற்றோர் கூட யூகத்தில் அடிப்படையிலேயே கூறுகின்றனர். அவர்களால் சரியான, துல்லியமான தகவலை எனக்கு தரமுடியவில்லை.
என் தந்தை ஆவுடையப்பனுக்கு, தற்போது 74 வயது ஆகிவிட்டதாக, அவர் கூறுகிறார். தாய் வெண்ணிலாவுக்கு 70 வயது ஆகலாம் எனவும் தெரிவிக்கின்றனர். அந்த காலகட்டத்தில், 10 க்கும் மேல் குழந்தைகளை பெறுவதை பலர் பொழுதுபோக்காக கொண்டுள்ளதாக தெரிகிறது.
ஏனெனில் பல கிராமங்களுக்கு மின்சார வசதியில்லை. பேருந்து வசதியில்லை. இதனால் கணவருக்கு மனைவி துணை, மனைவிக்கு கணவன் துணை, பெற்றோருக்கு பிள்ளைகள் துணை, பிள்ளைகளுக்கு பெற்றோர் துணை. இப்படியே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது.
என் பெற்றோர்கள் மட்டும், அதற்கு விதிவிலக்கா என்ன? அவர்களும் மற்றவர்களை போல், 10 மேல் இல்லாவிட்டலும், அரை டஜன் பிள்ளைகளை பெற்று பெருமை சேர்த்தனர். இதில் அதிக செல்வங்களை பெற்றனர். அதாவது பெண் குழந்தை செல்வங்கள் அதிகம்.
நான் பிறந்த சமயம் எனக்கு முன் அண்ணன், அக்காக்கள் இருந்தனர். குழந்தைகள் வளர, வளர புதிய குழந்தைகளையும் கவனிக்க வேண்டும். இதனால் மூத்த அக்கா, எப்போதுமே இன்னொரு தாயாக மாறி பின்னர் பிறக்கும் குழந்தைகள் கவனிக்க துவங்கிவிடுவர். அப்படிதான் எங்கள் குடும்பத்திலும்..!
நான் பிறந்து, தோராயமாக 4 வயது கூட ஆகவில்லை, அந்த சமயத்தில் என் தந்தை என்னை வயதை கூட்டி 1-ம் வகுப்பில் சேர்த்துவிட்டார். ஏனென்றால் அடுத்த புதுவரவு. வீட்டில் குழந்தை பட்டாளங்களால், பெற்றோர்கள் அதில் இருந்து தப்பிக்க ஒரே வழி, ஸ்கூலில் சேர்ப்பது.
கண்டிப்பாக எனக்கு அப்போது 4 எட்டி கூட இருக்காது. ஸ்கூலில் கொண்டு என் தந்தை சேர்க்கிறார். அப்போது, அந்த ஸ்கூல் ஆசிரியை கூறுகிறார். “ குழந்தையை பாருங்கள், ரொம்ப சின்னவனா இருக்கான். இப்போ வேண்டாம். அடுத்த வருஷம் பார்க்கலாம். அவனுக்கு கைகூட எத்தல.. என,
அப்போதெல்லாம், சரியான பிறந்தநாளை பலர் குறித்து வைக்காததால், பிறந்தநாள் சான்றிதழும் இருப்பதில்லை. ஸ்கூலில் சேர்க்கும்போது, வலது கையை தலைக்கு மேல் மடித்து வைத்து, இடது காதை தொடக்கூறுவார்கள்.
எப்படியோ, எனது தந்தைக்கு என்னை ஸ்கூலில் சேர்த்தால் போதும், என்ன செய்வது, ஆசிரியை எவ்வளவோ கூறியும் பலனில்லை. இறுதியில் என தந்தையே வென்றார். என்னை ஸ்கூலில் சேர்த்தாயிற்று. குத்துமதிப்பாக ஒரு பிறந்த நாளை பதிவு செய்து சேர்க்கப்பட்டேன்.
இது, பின்னாளில் எனக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது. இப்போ கூட..!! சரி நாம் கதைக்கு வருவோம்.
செந்திலாகிய நான், குமரி மாவட்டத்தில் நாகர்கோயில் அருகே ஒரு ஊரில் அவுடையப்பனுக்கு பிறந்தேன். அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்ந்தேன்.
2-ம் வகுப்பு, 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறொரு ஊரில் சேர்ந்தேன். எங்கள் பெற்றோர் வேறு ஊருக்கு குடிபெயர்ந்தனர். 5-ம் வகுப்பு வரை அங்கு தான் பயின்றேன்.
அந்த காலகட்டத்தில், நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்தோம். சரியான உணவோ, உடுத்தி கொள்ள நல்ல உடையோ, ஆரோக்கியமான உடலோ கிடையாது. அப்பா, ஆவுடையப்பனுக்கு ஒழுங்கான வேலை கிடையாது. வேலைக்கு சென்றாலும், சம்பளத்தை அம்மாவிடம் கொடுப்பதில்லை.
அப்பா, ஒரு பெரும் குடிகாரராக அப்போதில் இருந்து இன்று வரை வாழ்ந்து வருகிறார். இதனால், அம்மா வெண்ணிலாவுக்கு கோபம் ஏற்பட்டு, இருவரும் எப்போதுமே சண்டையிட்டு கொண்டு இருப்பார்கள். இதனை ஒவ்வொரு நாளும் பார்த்துதான் அனைத்து பிள்ளைகளும் வளர்ந்தோம். இது இன்று வரை தொடர்கிறது.
இதற்கிடையில் அப்பா ஆவுடையப்பன், எங்களையும், அம்மாவையும் சரிவர கவனிக்காமல், வேறு சில பெண்களுடன் தொடர்பில் கூட இருந்ததாக தெரிகிறது. இதை நான், இங்கு சொல்ல வெட்கப்படவில்லை. ஏனெனில், அந்த காலத்தில், மிகச்சிறு வயதில், என் அப்பா, வேறு பெண்ணிடம் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து இருந்ததை பார்த்து மனம் நொந்தேன்.
ஆனால் இன்று, என் தந்தை வயதான தோற்றத்தில் இருப்பதை காணும் போது, மனம் வருந்துகிறது. அவரின் பழைய வாழ்க்கையை நினைக்கும் போது, அவர்மீது கோபம் அதிகமாக வருகிறது.
என் தந்தை மட்டுமே, எங்கள் அனைவரையும் விட சந்தோஷமாக, ஆடம்பரமாக வாழ்ந்தார். அதுதான் உண்மை...
(தொடரும்...)